திங்கள், 5 ஆகஸ்ட், 2019

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ பிரிவுகள் நீக்கப்படும்: அமித்ஷா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370, 35 ஏ பிரிவுகள் நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் அறிவித்தார். இதற்கான தீர்மானத்தை அவர் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன, ஜம்மு காஷ்மீரில் 40,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என அனைத்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஏ ஆகிய அரசியல் சாசன பிரிவுகள் நீக்கப்படும் என அறிவித்தார். இதற்கான தீர்மானத்தையும் அவர் தாக்கல் செய்தார்