புதன், 17 ஜூலை, 2019

உலகத்திலேயே இந்தியால மட்டும் தான் ஈஸியா டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குது.. நிதின் கட்கரி காட்டம்

நாட்டிலுள்ள டிரைவிங் லைசென்ஸ்களில் 30 சதவீதம் போலியானவையாக உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசிய போது, இந்தியாவில் மட்டும் தான் எளிமையான முறையில் டிரைவிங் லைசென்ஸை பெற முடியும் என கூறினார். உலகத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற எளிமையான வழி இருக்கிறது என்றால் அது நம் நாட்டில் தான். நம் நாட்டில் ஆண்டிற்கு 1,50,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கொண்டு வர முடியாமல் தோல்வியடைந்துள்ளதாக கூறினார். தற்போது இதனை நிறைவேற்றி மக்களின் உயிரை காப்பாற்றுவோம் என்றும் கூறினார் நிதின் கட்கரி. இந்தியாவில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே விபத்துகள் குறைக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் அளவில் தமிழகத்தில் சாலை விபத்துகள் நிறையவே குறைந்துள்ளது. தமிழகத்தை பொருத்த வரை 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழ்நாட்டை பின்பற்றி விபத்துகளை குறைப்போம் என்றார். 

டிரைவிங் லைசென்ஸில் இருக்கும் புகைப்படம் ஓட்டுநருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயம் இன்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார். யாரும் ரூ.100 அபராதம் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் விதியை மீறிவிட்டு போக்குவரத்து காவலர்களை கடந்து செல்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தற்போது உள்ள ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்து விமர்சிக்க வார்த்தைகளே இல்லை என்று காட்டமாக கூறினார்.

நன்றி ஒன் இந்தியா !