செவ்வாய், 23 ஜூலை, 2019

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வியை தழுவியது.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வியை தழுவியது.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கடந்த ஜூலை 18ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது நான்காவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வந்தது. விவாதத்தின் முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக அவையில் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசினார்.அப்போது, என்னுடைய பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன். நான் முதலமைச்சராக இருக்க காரணமான காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜகவினர் குதிரை பேரத்தை தொடங்கிவிட்டனர் என்று குமாரசாமி பேசினார்.

இதனையடுத்து, 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அவைக்குள் இருக்குமாறு உத்தரவிட்டார். முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர், எம்.எல்.ஏக்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, அதுவும் எண்ணப்பட்டது. காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மற்றவர்கள் எதிராக வாக்களித்தனர்.

இறுதியாக, நம்பிக்கை வாக்கெடுப்பின் இறுதியில் காங்கிரஸ் - மஜத அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு கவிழ்ந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது.