செவ்வாய், 23 ஜூலை, 2019

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது !

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. பில்லிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், நேற்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. ஜூலை 17 ம் தேதி கே.ஆர்.எஸ் அணையில் இருந்து, விநாடிக்கு 355 கனஅடியும், கபினி அணையில் இருந்து 500 கனஅடியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 855 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக இருக்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் நீர்திறப்பு 3,199 கனஅடியில் இருந்து 4,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,000 கனஅடி காவிரி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது; நீர் இருப்பு 11.64 டி.எம்.சி. யாக உள்ளது. குடிநீருக்காக மேட்டூர் அணையில் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா !