செவ்வாய், 16 ஜூலை, 2019

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிதீற்கும் மழை !

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகாரில் பாயும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால், நூற்றுக் கணக்கான கிராமங்கள் தீவு கூட்டங்களாய் காட்சி அளிக்கின்றன. 


அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. 28 மாவட்டங்களில் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காசிரங்கா உயிரியல் பூங்காவில் 70 சதவீதம் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், ஏராளமான காட்டுயிர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மிசோரம், மேகாலயா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.