செவ்வாய், 23 ஜூலை, 2019

டிஎன்பிஎல்: மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய திண்டுக்கல் !

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 5-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த ஜெகதீசன் 87 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 50 ரன்களை தொட்டபோது அருண் கார்த்திக் 24 ரன்களும், அவரைத்தொடர்ந்து சரத் ராஜ் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை அணியினர் திணறினர். இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.