செவ்வாய், 4 ஜூன், 2019

இயற்கை எலுமிச்சை கொடுக்கும் இனிப்பான மகசூல்! - லட்சங்களில் வருமானம்!

‘இயற்கை வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் போன்றோரின் இடைவிடாத பரப்புரையால்... இயற்கை வேளாண்மைக்குத் திரும்பியவர்கள் ஏராளமானோர். ஏற்கெனவே ரசாயன முறை விவசாயத்தில் ஈடுபட்டு, இயற்கை முறை விவசாயத்துக்கு மாறியவர்கள் ஒரு ரகத்தினர். இயற்கை வேளாண்மைக்காகவே நிலம் வாங்கி விவசாயம் செய்துவரும் முதல் தலைமுறை விவசாயிகள், இன்னொரு ரகத்தினர். அந்த வகையில் விவசாய நிலம் வாங்கிக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இயற்கை முறையில் எலுமிச்சைச் சாகுபடி மேற்கொண்டு வருகிறார், திருப்பூர் நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி.

கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்னத்தூர் தோட்டத்துப்பாளையம் கிராமத்தில் இருக்கிறது, விஜயலட்சுமியின் எலுமிச்சைத் தோட்டம். ஒரு காலைவேளையில் தோட்டத்திலிருந்த விஜயலட்சுமியைச் சந்தித்தோம். “திருப்பூர்லதான் நாங்க வசிக்கிறோம். கணவர் தனியார் வங்கி மேலாளரா இருக்கார். அவர் வேலைக்குப் போனதும் நான் தோட்டத்துக்குக் கிளம்பி வந்துடுவேன். விடுமுறை நாள்ல அவரும் தோட்டத்துக்கு வந்துடுவார். ஆரம்பத்துல மஞ்சள், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்குனு வெள்ளாமை பண்ணினோம். நகரத்துல வசிக்கிற எங்களுக்கு அது தோதா அமையல. அந்த நேரத்துலதான் முன்னோடி இயற்கை விவசாயி ‘சட்டையில்லா’ சாமியப்பன் அறிமுகம் கிடைச்சது.



அவர் கொடுத்த ஆலோசனையிலதான் இயற்கை முறையில எலுமிச்சைச் சாகுபடி செய்ய முடிவு செஞ்சோம். அதுலயும் நாட்டுரக எலுமிச்சையைத்தான் நடவு செய்யணும்னு முடிவா இருந்தோம். அங்க இங்க தேடி, கடைசில கர்நாடக மாநிலம், சிருங்கேரில இருக்குற ஒரு நாற்றுப் பண்ணையில ஒரு நாற்று 150 ரூபாய்னு 4 ஏக்கர் பரப்புக்குத் தேவையான 520 நாற்றுக்களை வாங்கிட்டு வந்தோம்.

18 அடி இடைவெளியில 3 அடிக்கு 3 அடி அளவுல குழிகள் எடுத்து, குழிக்கு ஒரு கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் போட்டு நாற்றுகளை நடவு செஞ்சோம். ஏக்கருக்கு 130 நாத்துகள நடவு செஞ்சோம். அடுத்து சொட்டுநீர்க் கருவிகளைப் பொருத்தினோம். ஒரு எலுமிச்சைச் செடிக்குத் தினமும் 6 லிட்டர் தண்ணீர் கொடுத்தாத்தான் வருஷத்துக்கு ஒவ்வொரு செடியில இருந்தும் 3,000 காய்கள்ல இருந்து 5,000 காய்கள்வரை பறிக்க முடியும். முறையாகப் பராமரிச்சதுல நடவு செஞ்ச 18 மாசத்துலயே எலுமிச்சை காய்க்க ஆரம்பிச்சுடுச்சு.

ஆடி, தை மாசங்கள்ல எலுமிச்சையில காய்ப்பு அதிகமா இருக்கும். மத்த மாதங்கள்ல சராசரி மகசூல்தான் கிடைக்கும். எப்படிப்பார்த்தாலும் ஒரு வருஷத்துல ஒரு செடியிலிருந்து குறைந்தபட்சன் 3,000 காய்கள் அறுவடை செய்யலாம். ஒரு கிலோ எலுமிச்சை 70 ரூபாய்ல இருந்து 140 ரூபாய் வரை விலை போகுது. சரியாகப் பராமரிச்சா நாட்டு ரக எலுமிச்சையில 30 வருஷம் வரைக்கும் சிறப்பான காய்ப்பு இருக்கும்” என்ற விஜயலட்சுமி விற்பனைகுறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“முழு இயற்கை முறையில விளைஞ்ச எலுமிச்சைங்கிறதால ஆலய வழிபாடுகளுக்கு அனுப்பும் வியாபாரிகள் எங்கள் எலுமிச்சைப் பழங்களை விரும்பி வாங்குறாங்க. திருப்பூருக்குப் பக்கத்துல இருக்குற பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயில் வளாகத்துல இருக்குற ஒரு பூக்கடைக்காரர், எங்க தோட்டத்துல விளையுற எலுமிச்சைப் பழங்களை மொத்தமா எடுத்துக்கிறார்.


சில சமயங்கள்ல ஒரு பழம் 5 ரூபாய் வரை கூட விற்பனையாகும். குறைஞ்சபட்சமா ஒரு பழத்துக்கு ஒரு ரூபாய்னு விலை வெச்சுக்கிட்டு, ஒரு செடியில இருந்து வருஷத்துக்குக் குறைஞ்சபட்சமா 3,000 பழங்கள் கிடைச்சாலும்... ஒரு ஏக்கர்ல இருக்குற 130 செடிகள்ல இருந்து வருஷத்துக்கு 3,90,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். நாத்து, நடவு, சொட்டுநீர்க் கருவிகள்னு ஆரம்பகட்ட செலவுகளையெல்லாம் ரெண்டு வருஷத்துலயே எடுத்தாச்சு. இப்போ இடுபொருள், பராமரிப்பு, பாசனம், பறிப்புக்கு ஆகுற செலவுகள் மட்டும்தான்.

ஒரு வருஷத்துக்கு ஒரு செடிக்கு 500 ரூபாய் செலவாகும். அந்த வகையில ஒரு ஏக்கருக்கு 65,000 ரூபாய் செலவாகும். அதுபோக ஒரு வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல இருந்து 3,25,000 ரூபாய் கிடைக்கும். மொத்தம் 4 ஏக்கருக்குக் கணக்கு பண்ணினா வருஷத்துக்கு 13,00,000 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்ற விஜயலட்சுமி நிறைவாக,

“2010-ஆம் வருஷம் இந்த 4 ஏக்கர் நிலத்தை 42,00,000 ரூபாய்க்கு வாங்கினோம். அந்தத்தொகையை எல்லாம் மொத்தமா எடுத்துட்டோம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

நீர் மேலாண்மை

தன் தோட்டத்தில் செயல்படுத்தியிருக்கும் நீர் மேலாண்மை குறித்துப் பேசிய விஜயலட்சுமி, “1,200 அடி ஆழம் உள்ள போர்வெல்தான் எங்களுக்குள்ள ஒரே பாசன ஆதாரம். 1,00,000 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியில தண்ணீரைச் சேமிச்சு வெச்சுத்தான் பாசனம் செய்யறோம். சுற்றிலும் ஏரி, குளம் குட்டைகள் எதுவும் இல்லாத நிலம். 

எப்போதாவது கிடைக்கும் மழைதான் எங்களோட போர்வெல்லுக்கு நீராதாரம். அதனால, பெய்ற மழையில ஒரு சொட்டுகூட எங்க நிலத்தை விட்டு வெளியில் போகாதபடி நிலத்தைச் சுற்றி நான்கு புறமும், நான்கு அடி உயரத்தில் தடுப்பு ஏரி அமைச்சிருக்கோம். அதனால, நிலத்தடி நீர்மட்டம் குறையாம இருக்கு” என்றார்.

பராமரிப்பு முறைகள்

எலுமிச்சைப் பராமரிப்புக் குறித்துப் பேசிய விஜயலட்சுமி, “நடவு செஞ்சதுல இருந்து மாசம் ரெண்டு முறை 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேர்வழி உரமாவும், இலைவழி உரமாவும் கொடுக்கிறோம். பூக்கள் உதிராம இருக்க 15 நாள்கள் இடைவெளியில் அதிகாலை நேரத்துல தேமோர்க் கரைசலைப் புகைபோலத் தெளிச்சுவிடுறோம். எலுமிச்சைச் செடிகளை அதிகம் பாதிக்கிறது, நூற்புழுத் தாக்குதல். வருஷத்துக்கு ரெண்டு தடவை ஒவ்வொரு செடியோட தூர்லயும் 500 கிராம் வேப்பம்பிண்ணாக்கை வெச்சுப் பாசனம் செய்றதால, நூற்புழுத் தாக்குதல் வர்றதில்லை.

பூஞ்சண நோய் தாக்குனா சுக்கு அஸ்திரம் தெளிப்போம். 200 கிராம் சுக்குத்தூளை 2 லிட்டர் தண்ணீர்ல போட்டு நல்லாக் காய்ச்சிக்கணும். அதேபோல 5 லிட்டர் பசும்பாலைச் சுண்டக்காய்ச்சி ரெண்டையும் 100 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சா பூஞ்சண நோய்கள் தாக்காது. இந்த அளவு ஒரு ஏக்கருக்கு சரியா இருக்கும். எலுமிச்சைத் தோட்டத்துல அங்கங்க திருநீர்பத்ரி செடிகளை நட்டு வெச்சா எலுமிச்சையில பூக்கள் நிறைய பூக்கும்” என்றார்.