அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் பாடலும் பெற்ற பாண்டி நாட்டுத் தலம் திருப்பூவணம் !

அச்சோ! அழகிய பிரானோ! - திருப்பூவணம்.


பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார் என்று அப்பர் அடிகள் பரவிய, வைகை மணல் துகளெல்லாம் சிவலிங்கமாகக் காட்சியளித்த திருப்பூவணம் திருத்தலத்தில் வழிபடும் பேறு அண்மையில் ஒரு பயிற்சிக்குச் சென்றபோது வாய்த்தது.

மானாமதுரையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 15 கிமீ தூரத்தில் வைகை ஆற்றின் கரையில் திருப்பூவணம் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர்,  திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் பாடலும் பெற்ற பாண்டி நாட்டுத் தலம் திருப்பூவணம். சிவபெருமானைக் காண்கையில் "பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்" என்று பாடினார் அப்பர். அப்பிள்ளை மீது அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடியுள்ளார்.பொன்னனையாள் என்ற ஆடல்மகளின் சரிதம் அற்புதமானது. திருவிளையாடற் புராணத்தில் சோமசுந்தரர் நிகழ்த்திய அருளாடல்களில் 36வது திருவிளையாடலாக "இரசவாதம் செய்த படலத்தில்" அவளுடைய பேரன்பு பேசப்படுகிறது. பொன்னனையாள் என்ற பேரழகு ஆடல்மகள் நாட்டிய சாத்திரம் முழுதும் கற்றுத்தேர்ந்தவள். கோயில் தளிப்பெண்டிர். அடியார்க்கு நாள்தோறும் அன்னம் பாலித்துத் தொண்டு செய்துவருகிறாள். அவள் மனதில் பிரானுக்குப் பொன்னால் உற்சவத் திருவுரு செய்ய வேண்டும் என்ற ஆசை எழுகிறது. பொன்னுக்கு வழியில்லை. சொக்கேசனிடமே நாளும் வேண்டுகிறாள். ஒருநாள் அன்னம் ஏற்கக் தபோவனர் உருவில் பெருமானே வருகிறான். இரும்பு, உலோகப் பாத்திரங்களைக் கொண்டு வரச் சொல்கிறான். "ஆணவ மலத்தை நீக்கினால் மனித மனம் எவ்வாறு முற்றும் சுத்தம் பெறுமோ" அதைப்போல அப்பாத்திரங்களைத் தங்கமாக்கி மறைகிறான்.


பொன்னாலான விக்கிரகம் செய்விக்கிறாள் பொன்னணையாள்! அந்தத் திருவுருவின் அழகில் மயங்கிய அவள் "அச்சோ" என்று வியந்து "அழகிய பிரானோ" என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். அந்த உகிர் வடு சிலையில் ஏற்பட்டதாம். பூவணநாதருக்கு விழாக்கள் நடத்திப் பலகாலம் வாழ்ந்த, அன்பால் தெய்வமான பொன்னனையாள் கோயிலுக்குள் நுழைந்ததும் வலப்புறம் சிற்பமாகக் காட்சியளிக்கிறாள்.  பெருமானை முத்தமிடும் புடைப்புச் சிற்பம் ஒரு தூணிலும் இருக்கிறது.

சுவாமி அற்புதமான கல் திருப்பணியில் மண்டபங்கள், பரிவாரத் தெய்வங்களுடன் அருள்பாலிக்கிறார். அதனை அடுத்துத் தனிக்கோவிலில் பெரிய முகப்பு மண்டபம், உள்மண்டபம், கருவறையில் அம்பாள் மின்னனையாள் என்ற சௌந்திர நாயகி பொலிவுடன் காட்சியளிக்கிறாள்

பெயர்களெல்லாம் வடமொழியில் மாற்றம் பெற்றபோது "மின்னனையாள்" என்ற பெயருக்கு வடமொழிச் சொல் கிடைக்கவில்லை போலும்! அதனால் "சௌந்திர நாயகி" என்ற அழகம்மை ஆனாள் அம்பாள்! பூவணத்தார் "புஷ்பவனேசர்" என்ற நாமம் ஏற்றார்.

காசியில் பெற்றோருடைய அஸ்தியைக் கரைக்கச் சென்ற வணிகனொருவன் வைத்திருந்த கலயம் வழியில் திருப்பூவணத்தில் மணத்ததாம். திறந்து பார்த்தபோது எலும்புகள் பூக்களாக மாறியிருந்தனவாம். அதனால் திருப்பூவணத்தில் முன்னோருடைய அங்கத்தை வைகை ஆற்றில் கரைப்பது முக்தியளிக்குமென நாளும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.

காண வேண்டியவை: சிற்பங்கள்:
1.திருமலை நாயக்கர் தேவியரோடு
2.பொன்னனையாள் திருவுரு.
3.இரசவாதம் செய்யவந்த தபோவனர்.
4.நடராசர் சபையில் மிகப் பெரிய ஆடல்வல்லான் கற்சிற்பம்.
5.முத்தமிடும் பொன்னனையாள உரு
6.மூன்று சோமாஸ்கந்தர், அம்பாள், பொன்னனையாள், நடராசர், சிவகாமி அம்மை முதலிய ஏராளமான உலோகத் திருமேனிகள்.
7.வைகை ஆற்று மணல்!

பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்!
                                    - மாணிக்கவாசகர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்