வேளாண் இயந்திரங்களை வாடகைக்குப் பெற உழவன் செயலி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை: விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் வசதிக்காக `உழவன் கைபேசி’ செயலி சேவையை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள 76 அரசு மற்றும் 625 தனியார் மையங்களை கைபேசி செயலியில் உள்ள வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் சேவை மூலம் தொடர்பு கொண்டு  பயனடைந்து வருகின்றனர். இந்த முயற்சியின் அடுத்தகட்டமாக, டிராக்டர் அன்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட்-ன் ஜெஃபார்ம் நிறுவனம் தாங்கள் தயாரித்து அளித்து வரும் பண்ணை சார்ந்த வாடகை இயந்திரம் மையத்தின் சேவைகளை, தமிழ்நாடு  அரசின் `உழவன் கைபேசி’ செயலியுடன் கூட்டாண்மை சமூக பொறுப்பின் அடிப்படையில் இணைத்து, டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை வைத்திருக்கும் விவசாயிகள் வாடகைக்கு அளிக்க செயலியில் பதிவு செய்தல்,  டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு எடுக்க பதிவு செய்தல் போன்ற சேவைகளை அளித்திடும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள கைபேசி செயலி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.இந்த சேவையின் மூலம், விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் தங்களுக்கு தேவையான பண்ணை இயந்திரம் எவரிடம் உள்ளது, எந்த தேதியில் கிடைக்கும், அதற்கான வாடகை என்ன போன்ற  விவரங்களை அறிய இயலும். 
அதேபோன்று, விவசாய இயந்திரங்களை வாடகைக்கு அளிக்க விரும்புவோர் இயந்திரங்கள் யாருக்கு தேவை, எந்த தேதியில் தேவை போன்ற விவரங்களையும் அறிய இயலும். மேலும், கைபேசி செயலியினை பயன்படுத்த முடியாதவர்கள், சேவை மையத்தின் மூலமாக கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800 420 0100-ஐ தொடர்பு கொண்டு இந்த சேவைகளை பெறலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்