காங். ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி… ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு

பாட்னா:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை முழு வீச்சில் தொடங்கி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, பீகார் தலைநகர் பாட்னாவில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசுகள் பதவியேற்ற 10 நாளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். பீகார் விவசாயிகளை மோடி மிகவும் இழிவுபடுத்தியுள்ளார். விவசாயிகளை இழிவுபடுத்தினால் அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள், விவசாயிகள் தங்களுக்கு பாஜக வேண்டாம் என்றும் காங்கிரஸ் தான் என்று கூறி வருகின்றனர். கடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆண்டுதோறும் 2 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தேர்தலில் தந்த வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றவில்லை. 

பிரதமர் மோடி திடீரென்று ஒருநாள் இரவு 8 மணி போல கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என்றார். அப்படி இருக்க ஏன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தினார். பணமதிப்பு நீக்கத்தால் ஏழை எளிய மக்கள்தான் வங்கி முன் பல நாட்கள் வரிசையில் நின்றார்களே தவிர கருப்பு பணமோ ஊழலோ நாட்டில் ஒழிய வில்லை. 

மோடி கூறிய அந்த நல்ல காலம் எங்கே? ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பெரிய மோசடி. பொது மக்களின் பணத்தை மல்லையாவிற்கும், நிரவ் மோடிக்கும் தான் மோடி அளித்தார். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு விவசாயப் புரட்சி, வெண்மை புரட்சி, தொழிநுட்ப புரட்சி ஆகியவற்றை தந்தது. அப்படியிருக்க கடந்த ஐந்தாண்டுகளாக மோடியின் ஆட்சி அம்பானி, நீரவ் மோடி ஆகிய கோடிஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்த உடன் நாட்டின் ஏழை எளியவர்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வோம். நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்வோம் என்று கூறினார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில், ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


நன்றி ஒன் இந்தியா !

கருத்துரையிடுக

0 கருத்துகள்