முத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் அறிக்கை தாக்கல்

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் சார்ந்த அறிக்கையை தொழிலாளர் வாரியம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 1972-73ஆம் ஆண்டு முதலே வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு வெளியாகி வருகின்றன. இந்நிலையில், 1977-78ல், வேலையற்றோர் விகிதம் 2.5% ஆக இருந்தது. அதுவே 2011-12-ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 2.2% இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. 2017-18-ஆம் ஆண்டில் வேலையற்றோர் நிலை 6.1% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை இதற்கு காரணம் காட்டினர். இதற்கு மத்திய அரசு முத்ரா கடன்கள் மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மறுப்பு தெரிவித்து வந்தது.


ஏற்கெனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு, தொழிலாளர் வாரியத்தை முத்ரா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களை கணக்கிட உத்தரவிட்டது. ‘பிரதம மந்திரி முத்ரா யோஜ்னா’ திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் சிறு,குறு தொழில்களுக்கு அளித்து வருகின்றனர். இதுவரை இந்தத் திட்டத்தின் மூலம் 15.56 கோடி பேர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக 7.23 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இத்திட்டத்தின் மூலம் கணக்கிடப்பட்ட வேலைவாய்ப்பின் அறிக்கையை தொழிலாளர் வாரியம் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் முத்ரா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை கணக்கிடுவது ஆபத்தான ஒன்று என பொருளாதார வல்லுநர்கள் முன்பே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் முத்ரா கடன்கள் அனைத்தும் வேலை இல்லாதவர்களுக்கு கிடைத்திருக்காது. அத்துடன் முத்ரா கடன்களை சுயத் தொழில் தொடங்குபவர்கள் தான் வாங்கியிருப்பார்கள் அதனால் அவர்கள் வேலைவாய்ப்பை பெரிதாக உருவாக்கியிருக்க மாட்டார்கள் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கருத்துரையிடுக

0 கருத்துகள்