பயன்மிகு பனைமரம்

பனை மரம் மிகமிக மெதுவாக வளரும் மரமாகும். முதல் குருத்தோலை விதைத்து 5 மாதங்கள் கழித்துத்தான் தோன்றும். நன்றாக விரிந்த முதல் பனை ஓலை இரண்டாம் ஆண்டு தான் தெரியும். 13 முதல் 15 வருடம் கழித்து சுமார் 12 முதல் 13 மீட்டர் உயரம் வளர்த்தபின் தான் பாளை விட்டு பதனீர் கொடுக்கும்.சராசரியாக ஒருமரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும். தை முதல் ஆனி மாதம் வரை பதநீர் கிடைக்கும். பதநீர் மற்றும் நுங்கு விளைச்சல் மரத்திற்கு மரம் மாறுபடும். ஒரு லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் #பனை வெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் பதனீர் மூலம் சுமார் 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்யலாம்.

ஒரு மரத்தில் 5 முதல் 6 முட்டிகள் கட்டி 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 2 லிட்டர் பதநீர் வரை சேகரிக்கலாம். 15 லிட்டர் பதநீரை கொப்பரையில் ஊற்றி 2 ½ மணிநேரம் காய்ச்சி பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.

பெண் மரத்தில் அதிகபட்சமாக 10 லிட்டர் பதநீர் கிடைத்தால் ஆண் மரத்தில் 7 லிட்டர் தான் கிடைக்கும். 2 முதல் 4 மரம் ஏறி ஒரு கட்டு ஓலை வெட்டலாம். ஒரு கட்டிற்கு 40 ஓலை வீதம் விற்பனை செய்யப்படுகிறது.

பனைமட்டையை ஊறவைத்து நைத்து அதிலிருந்து பெறப்படும் நாரினைக் கொண்டு கயிறு தயாரிக்கப்படுகிறது. ஓலையைக் கொண்டு பாய் மற்றும் பெட்டிகள் செய்யப்படுகின்றன.
பனை ஓலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி கீழ்க்கசிவைத் தடுக்கும். நுங்கு சிறுநீர் பெருக்கி வெப்பத்தைக் குறைத்து உடலை உரமாக்கும். பதநீர் சிறுநீர் பெருக்கி குளிர்ச்சி உண்டாக்கும்.திருப்பனந்தாள், திருமழப்பாடி, திருப்பனையூர் ஆகிய சிவதலங்களில் பனைமரம் தலவிருட்சமாக உள்ளது.

பனைமரம் இந்தியாவில் 8.6 கோடியும், அதில் பாதிக்கு மேல் சுமார் 5 கோடி தமிழ்நாட்டில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
ஆனால் அதிகரித்து வரும் செங்கல் சூளைத் தொழிலால் இப்பொழுது பனை மரங்கள் அழிந்து வருகின்றன.

பருவநிலை மாறுதலை சமாளிப்பதில் பனைக்கு நிகர் எதுவும் இல்லை. காடு, மேடு, தரிசு, வயல், தோட்டம் என்று எங்கு வேண்டுமானாலும் வளர்ந்து பலன்தரும் கற்பக விருட்சமான பனையை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .

கருத்துரையிடுக

0 கருத்துகள்