தைப் பொங்கலை கொண்டாடும் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அறிவிப்பு - வடக்கு கரோலைனா மாநில கவர்னர் ராய் கூப்பர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலைனாவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்' என்று அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாகாணத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். அம்மாகாண வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இந்த நிலையில்தான், தைப் பொங்கலை கொண்டாடும் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக அறிவிக்க வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர். 



இதையேற்று, வடக்கு கரோலைனா மாநில கவர்னர் ராய் கூப்பர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வீடியோ மூலம் ஆங்கிலத்தில் உரை ஆற்றியுள்ளார். அந்த வீடியோ யூடியூப் இணையதளத்திலும் காணக்கிடைக்கிறது. மாகாண கவர்னர் ராய் கூப்பர் கூறுகையில், "வடக்கு கரோலைனா மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள், அதன் பன்முக கலாச்சாரத்தில் பெருமளவில் பங்களித்துள்ளனர். இந்தியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் அமெரிக்காவின் பல மாநிலங்கள், பல வெளி நாடுகளில் தமிழ் மொழி பெருமளவில் பேசப்படும் மொழியாக உள்ளது. 

தமிழ் மொழி, தமிழர்களின் அடையாளம். உலகில் இன்னும் எழுத்தப்பட்டும், பேசப்பட்டும் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழாகும். தமிழ் நாள்காட்டியின் முதல் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தைப் பொங்கல் என 4 நாட்கள் விழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். வட கரோலைனா மாகாணமும், தமிழர்களுடன் இணைந்து தைப் பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று ராய் கூப்பர் கூறியுள்ளார். அமெரிக்க வடக்கு கரோலைனா மாகாண ஆளுநரின் இந்த அறிவிப்பு தமிழுக்கும், தமிழர் கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள மற்றொரு உலகளாவிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்