ரூ.4.19 லட்சத்தில் புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய மாருதி வேகன் ஆர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 7 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். 1.0 லிட்டர் மாடலானது எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஎம்டி ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

  
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலானது விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஏஎம்டி, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஏஎம்டி ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் முற்றிலும் புதிய மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய டால்பாய் டிசைன் கான்செப்ட்டில்தான் இந்த காரும் வந்திருக்கிறது. எனினும், வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வேறுபடுகிறது.

பழைய மாடலைவிட நீளத்தில் 60 மிமீ வரையிலும், அகலத்தில் 145 மிமீ வரையிலும் அதிகரித்துள்ளது. ஆனால், உயரம் 25 மிமீ குறைந்துள்ளது. புதிய வேகன் ஆர் கார் 3,655 மிமீ நீளமும்,1,620 மிமீ அகலமும், 2,435 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. இதனால், உட்புற இடவசதி மேம்பட்டிருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் இருக்கும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
  
மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் முதல்முறையாக வேகன் ஆர் காரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
  
புதிய மாருதி வேகன் ஆர் காரில் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ என்று குறிப்பிடப்படும், தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் மேனுவல் ஏசி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுசகள், ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர் வசதிகள் உள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் இல்லாதது ஏமாற்றமான விஷயம்.

புதிய மாருதி வேகன் ஆர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
  
புதிய மாருதி வேகன் ஆர் கார் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.  
ரூ.4.19 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ரூ.5.69 லட்சம் வரையிலான விலையில் புதிய மாருதி வேகன் ஆர் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்படுகிறது. ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்