Business

தமிழ் வாழ்க !


இன்றைய 12-மே-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.46 (லி) | டீசல் ரூ 69.88 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,052 | 24 காரட் 1கி ரூ 3,327 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 40,350 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.93

வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை!

சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்… என முருங்கைக்காயைக் கொண்டு பலவித உணவுகள் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கைக்காய் இல்லாத சைவ விருந்தே கிடையாது என்றுகூட சொல்லலாம். இப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம்… அது தன்னுள் கொண்டுள்ள ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்களே!
முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கும் என்பதால், பாசன வசதி குறைவான விவசாயிகளுக்கு உகந்த பயிராகவும் இருக்கிறது. அதனால்தான் காய்கறி விவசாயிகள் பலரும் முருங்கையை விடாமல் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி.
தண்ணீர் குறைந்ததால் முருங்கை!
காய் பறிப்பில் மும்முரமாக இருந்த சடையாண்டியைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ''எங்க பூர்வீகமே இந்த ஊருதான். எங்க தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். எனக்கு படிப்பு வரலை. அதனால சின்னவயசுலயே அப்பா கூட விவசாயத்துல இறங்கிட்டேன். எங்களுக்கு பதினைஞ்சு ஏக்கர் நிலம் இருக்குது. வாழை, கரும்புனு செழும்பா விவசாயம் நடந்துக்கிட்டு இருந்த இடம்தான். அப்பறம் கிணத்துல தண்ணி குறைஞ்சுப் போனதால, குறைவான தண்ணியிலேயே வர்ற நாட்டு முருங்கையைப் போடலாம்னு முடிவு பண்ணினேன்.
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன, இந்தப் பக்கம் அவ்வளவா முருங்கை சாகுபடி இருக்காது. செடிமுருங்கையும் அப்ப பிரபலம் ஆகல. நாட்டுமுருங்கையைத்தான் பெரும்பாலும் சாகுபடி செய்வாங்க. தென்மாவட்டங்கள்ல முருங்கைக்குப் பேர் போனது, வளையப்பட்டிதான். அங்க இருந்துதான் விதைக்குச்சி வாங்கிட்டு வந்து நட்டேன். அந்த மரங்கதான் பதினஞ்சு வருஷமா மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு" என்று முன்கதை சொன்ன சடையாண்டி, தொடர்ந்தார்.
50 ஆண்டுகள் மகசூல்!
"இதுக்கு பெரிசா தண்ணி தேவையில்லை. நடவு செஞ்சி முறையா பராமரிச்சா ஒரு மாசத்துல வேர் பூமியில நல்லா இறங்கிடும். அதுக்குப் பிறகு, வறட்சியைத் தாங்கி வளந்திடும். முறையா கவாத்து செய்தா, கிட்டத்தட்ட 50 வருஷம் கூட மகசூல் எடுக்கலாம். நடவு செஞ்சி 6 மாசத்துல காய்ப்புக்கு வந்தாலும் ஒன்றரை வருஷத்துக்கு மேலதான் நல்ல மகசூல் கிடைக்கும். வருஷத்துக்கு மூணு போகம் காய் காய்க்கும். அதிகப் பராமரிப்பு தேவைப்படாத, செலவு வைக்காத பயிர் முருங்கைதான்.
ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். முதல் மூணு வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது. அடுத்தடுத்து பூச்சிக்கொல்லி தெளிச்சதுல, முருங்கை இலைகள், பூக்கள்லாம் கொட்டிப்போச்சு. அதனால, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். கிட்டத்தட்ட 11 வருஷமா இயற்கை விவசாயம்தான் செய்றேன். எனக்குத் தெரிஞ்ச இயற்கைத் தொழில்நுட்பங்களை மத்த விவசாயிகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.
விற்பனைக்கு வில்லங்கமில்லை!
முருங்கையில இலை, பட்டை, காய், விதைனு எல்லாத்தையும் விற்பனை செய்ய முடியும். எல்லாத்துலயும் மருத்துவக் குணம் இருக்கறதால தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. நான் காயாத்தான் விற்பனை செய்றேன். மொத்தம் இருக்கிற 15 ஏக்கர்ல 8 ஏக்கர்ல முருங்கை போட்டிருக்கேன். மீதி 7 ஏக்கர்ல தென்னை போட்டு அதுலயும் முருங்கை நடவு பண்ணிருக்கேன். தென்னை, முருங்கை ரெண்டுமே இளங்கன்னாத்தான் இருக்கு. எட்டு ஏக்கர் முருங்கையிலயும் இப்போதைக்கு ஒரு ஏக்கர்ல மட்டும்தான் காய் பறிச்சு விற்பனை செய்றேன். இந்த நல்ல முருங்கை ரகத்தை எல்லா விவசாயிகளும் பயிர் செய்யணும்னு, முருங்கை மரங்கள்ல இருந்து விண்பதியம் (பார்க்க, பெட்டிச் செய்தி) மூலமா முருங்கை நாத்து உற்பத்தி பண்ணி விற்பனை செய்துட்டு இருக்கேன்" என்ற சடையாண்டி, நாட்டுமுருங்கை மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

ஒரு மரத்தில் 2 ஆயிரம் ரூபாய்!
"நடவு செய்த ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு, நல்ல பராமரிப்புல இருக்கற ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு சராசரியா 200 கிலோ அளவுக்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ காய் 10 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரை விலை போகும். முகூர்த்த நாட்கள்ல இந்த மாதிரி அதிக விலைக்கு விற்பனையாகும். பொதுவா ஜனவரி, பிப்ரவரி மாசத்துல ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும். குறைந்தபட்ச விலையா கிலோவுக்கு 10 ரூபாய்னு வெச்சுக்கிட்டாகூட 200 கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஆச்சு. அந்தக் கணக்குலயே ஒரு ஏக்கர்ல இருக்கற 160 மரங்க மூலமா, வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும்.
50 ஆயிரம் ரூபாய் செலவானாலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.
மொத்த முருங்கை மரங்கள்ல இருந்தும் வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாத்து வரைக்கும் உருவாக்க முடியும். ஆனா, அதுல 70 ஆயிரம் நாத்துதான் தேறும். ஒரு நாத்து முப்பது ரூபாய்ல இருந்து முப்பத்தஞ்சு ரூபாய் வரை விற்பனையாகும். குறைஞ்சபட்ச விலையா முப்பது ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 70 ஆயிரம் நாத்துக்கள் விற்பனை மூலமா 21 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல ஏழு லட்ச ரூபாய் செலவு போக, 14 லட்ச ரூபாய் லாபமா நிக்கும்" என்ற சடையாண்டி நிறைவாக,
"எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம, அதிகத் தண்ணி இல்லாம இவ்வளவு லாபம் எந்தப் பயிர்ல கிடைக்குது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சாமானிய விவசாயிகளோட பணப்பயிர். அதில்லாம இந்த 'இயற்கை முருங்கை சாகுபடி' என்னை விருது வாங்குற வரைக்கும் உயர்த்தியிருக்கு. போன வருஷம் புதுச்சேரியில நடந்த ஒரு நிகழ்ச்சியில முதலமைச்சர் ரங்கசாமி கையால விருது வாங்கினேன். இந்த வருஷம் அரியலூர்ல நடந்த ஒரு நிகழ்ச்சியில முன்னாள் ஜனாதிபதி  அமரர் அப்துல்கலாம் கையால 'சிறந்த விவசாயி விருது' வாங்கியிருக்கேன்'' என்று பெருமிதத்துடன் சொல்லி விடைகொடுத்தார்
நன்றி: பசுமை விகடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்