30 அடி நீளம்; 20 அடி அகலம் இடத்தில காளான் உற்பத்தி!

மதுரை பாஸ்டின்நகரை சேர்ந்தவர் ஜான் லாரன்ஸ் ராஜ்குமார். இவர் 600 சதுர அடி பரப்பளவில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தென்னங்கீற்று கொட்டகை அமைத்து சிப்பிக்காளான் வளர்க்கிறார். எட்டு ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார்.

அவர் கூறியதாவது:

  • காளான் வளர்ப்பு குறித்து மதுரை வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள மனையியல் கல்லுாரியில் கற்றேன். இடத்தை வாடகைக்கு பிடித்து உற்பத்தி செய்கிறேன்.
  • காளான் வளர்ப்புக்கு வைக்கோல் மூலப்பொருள். வைக்கோலை குறிப்பிட்ட வெப்பத்தில் வேக வைத்து உலர வைக்கிறேன். இதனால் வைக்கோலில் இருக்கும் கெட்ட பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது.
  • உலர வைத்த வைக்கோலை பாலிதீன் பாக்கெட்டில் காளான் விதையுடன் வைத்து அதற்கான 80 சதவிகிதம் ஈரப்பதத்துடன் இருக்கும் குடிலில் 'பெட்' அமைத்து வளர்க்கிறேன். 20 நாளில் அவை நன்கு விளைந்திருக்கும்.
  • பால் காளானை விட சிப்பிக்காளான் சுவையாக இருக்கும். பிரியாணி, காளான் கிரேவிக்கு ஏற்றது. சைவம், அசைவம் போன்ற உணவு வகைகளில் இல்லாததை விட, அதிகமான அளவுக்கு அமினோ ஆசிட் நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன.
  • புரோட்டீன் அதிகளவு உள்ளது. காளான் சமைக்கும் போது நீரில் கழுவக்கூடாது. சிறிது, சிறிதாக நறுக்கி அப்படியே சமைத்தால் நுண்ணுயிர் சத்துக்கள் வீணாகாமல் தடுக்கலாம்.
  • மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. பகுதி நேரமாக இதை வளர்க்கிறேன். பண்ணைக்கே வந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். நான் உற்பத்தி செய்யும் காளான் வகைகளுக்கு புட் சேப்டி ஸ்டாண்டர்டு அதாரிடி ஆப் இந்தியா (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.), ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்டிரீஸ் (எஸ்.எஸ்.ஐ.,), இந்தியன் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் சர்ட்டிபிகேட் (ஐ.இ.சி.) போன்ற தரச்சான்றுகள் பெற்றுள்ளேன்.
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிதி உதவியின் கீழ் இயங்கும் ரூட்ஷெட், ஆர்செட்டி போன்ற சுய வேலை வாய்ப்பு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் காளான் வளர்ப்பு குறித்து இளம் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
  • காளான் சூப், டிரை காளான் வகைகளையும் தயாரித்து வருகிறேன். பகுதி நேரமாகவும், எளிமையாகவும், குறைந்த இடத்தில், அதிக லாபம் தரும் காளான் தொழில் வளர்க்க விரும்புவோருக்கு பண்ணையில் நேரடி பயிற்சி அளித்து வருகிறேன், என்றார்.
நன்றி: தினமலர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்