சனி, 24 ஆகஸ்ட், 2019

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் சட்ட கல்லூரி அமைக்கப்படும் என கடந்த மாதம் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் திருச்சி சாலை, டான்சி வளாகத்தில் தற்காலிகமாக சட்ட கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த 21 ஆம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் சட்டக் கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். சட்டப் படிப்பிற்கான சேர்க்கைகள் முடிந்த பிறகு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 12 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயதுக்கு பூர்த்தியாகதவர்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவது சட்டப்படி குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே விபத்துகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

நன்றி நியூஸ் ஜே !

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர், மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு வரும் தண்ணீர், விவசாய பயன்பாட்டிற்காக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது.

வரலாற்றில் 65-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ள நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றும் விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்தப்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு சாத்தியமாக்கும் என்று உறுதி அளித்தார்.
முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடியும், பின்னர், படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் 12 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகளைத் பத்திரமாக மீட்டு தோளில் சுமந்து சென்ற காவலர் !

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. பிரித்விராஜ் ஜடேஜா என்கிற காவலர் இரு சிறுமிகளை தூக்கிச் சென்று காப்பாற்றியது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

இதேபோல், அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, கடுமையான சூழல்களிலும் அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு காவலர் பிரித்வி ராஜ்சிங் ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. அவரது உறுதியைப் பாராட்டுங்கள்" என டுவீட் செய்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு !

வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. நான்கு நாட்களாக மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால், பம்பை, அச்சன்கோவில், மீனச்சல், மணிமலை  உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். வயநாடு, இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில்  ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 2 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியை ராகுல் காந்தி பார்வையிட்டார். 

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மீட்பு பணியில் ராணுவத்தினர் !

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, அலாமட்டி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால், பெலகாவி, பாகல்கோட்டை, ராய்ச்சூர், பீதர், குடகு, ஹாசன், தார்வார் உள்பட 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் பெருக்கெடுத்து பாயும் வெள்ள நீரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு, தீவுகளாய் காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தனர்.