வாழ்க்கையில் எதார்த்தம்..!!! - Tamil Live

Breaking

ads

ads

Monday, 13 August 2018

வாழ்க்கையில் எதார்த்தம்..!!!

Image result for simplicity aged person self worker cartoon


வங்கியில், இரண்டொரு மாதம் முன்பு - ஒருநாள் அவரை கவனித்தேன்.
வெள்ளை வேட்டி. வெள்ளை - தொள தொள - சட்டை. அறுபது வயதிருக்கலாம். ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்த என் அருகில் வந்தமர்ந்தார். கையில் பணமெடுக்கும் ச்செலான். கண்டிப்பாக எழுதித் தரச் சொல்லுவார் என்கிற இறுமாப்புடன் பேனாவில் கை வைத்துத் தயாராய் இருந்தேன்.

அவர் தன் சட்டையின் மேல் பையிலிருந்து பேனாவை எடுத்தார். நடுங்கும் விரல்களில் ச்செலானில் பெயர், தேதியை எழுதினார். பாஸ் புக்கை சரிபார்த்தபடியே, ஒவ்வொரு எண்ணாய்ப் பொறுமையாய் அக்கவுண்ட் நம்பரை எழுதினார்.
எழுதிக் கொண்டே என் பக்கம் திரும்பி சிரித்தார்.
“எழுதணும்களாய்யா?” என்றவனை ‘வேண்டாம் தம்பி” என்று சிரித்து மறுத்தார்.

தொகை எழுதும் Column வந்ததும், உள் பையிலிருந்து எதையோ எடுத்தார்.
சாணிப் பேப்பரில் அச்சடிக்கப்பட்டு நான்காய் மடித்து வைத்திருந்த அது - வாய்ப்பாடு.
”மொதல்லல்லாம் யார்ட்டயாச்சும் எழுதித்தரச் சொல்லிக் கேட்கறதுண்டு தம்பி. ஒருநாள் என் பையண்ட்ட சொன்னப்ப, படிச்சிருக்கலாம்லப்பா?ன்னு கேட்டுட்டான். சங்கடமாப் போச்சு. படிக்காட்டிதான் என்ன.. நாம நெனைச்சா எழுத முடியாதான்னு இப்ப, நானே எல்லாம் எழுதிக்கிடறது. ஆனா இந்த நம்பருங்க மட்டும்தான் மனசுக்குள்ள நிக்க மாட்டீங்குது. அதான் வாய்ப்பாடு புக்கை வெச்சுக்க ஆரம்பிச்சேன்” என்றார்.

அவரை நினைத்துப் பெருமையாக இருந்தது.
அதன்பிறகு பலமுறை அவரை காண்பதும், புன்னகையைப் பரிமாறிக் கொள்வதுமாய்க் கழிந்தது. ஒருமுறை திண்டுக்கல்லில்  ஓர் இடத்தைச் சொல்லி, “அங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்குல்ல.. அங்கதான் இருப்பேன்” என்றிருந்தார்.
இரண்டுநாள் முன், பைக் பெட்ரோலுக்காக அருகே இருந்த பெட்ரோல் பங்கில் செலுத்தினேன்.

பெட்ரோல் அடித்துக் கொண்டிருந்தபோதுதான் அங்கே அந்தப் பெரியவரைப் பார்த்தேன். காற்றுப் பிடிக்கும் இடத்தருகில் தரையில் அமர்ந்து எஞ்ஜின் போன்ற எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்.
நிமிர்கையில் அவரும் என்னைப் பார்த்திருந்தார். சிரித்தபடி அருகே வந்து, “வாங்க வாங்க தம்பி..” என்றபடியே அருகே வர நான் பைக்கை விட்டிறங்கியபடி அவரிடம் நெருங்கினேன்.

“பைக்கை அப்டி ஓரமா நிறுத்துங்க..” என்றவர் அலுவலக அறைக்கு நடந்தார்.
“இல்லீங்கய்யா.. நான் கெளம்பறேன். நீங்க வேலையைப் பாருங்க” எனும்போது “அட வாங்க தம்பி” என்று கையைப் பிடித்து அழைத்துப் போனார்.
அலுவலக அறையில் ஒரு இளைஞர் அமர்ந்திருக்க போய் அறிமுகப்படுத்தினார். “பேங்க்ல அடிக்கடி பார்ப்பேன்ம்பேனே? இவருதான். இந்தத் தம்பிகிட்ட மட்டும்தான் பேசுவேன் அப்பப்ப” என்று சொல்லிவிட்டு,
“டீயா காப்பியா” என்று கேட்டார்.
“இல்லீங்கய்யா” என்றவனை “அட சும்மா இருங்க” என்றுவிட்டு அலுவலக இளைஞரிடம் ‘ஒரு 20 ரூவா குடுப்பா.. டீ வாங்கிட்டு வரேன்” என்று வாங்கிக் கொண்டு போனார்.

என்ன பேசுவது என்று புரியாமல், “பெரியவர் ரொம்ப கவனம்க. பேங்க் வர்றப்ப பார்த்திருக்கேன். அவரு பையன் ஏதோ பேசிட்டான்னு அவரே எல்லாத்தையும் எழுதிக்கிறார். நீங்க வேற யாரையாச்சும்கூட அனுப்பலாமே சார்? பாவம் வயசான காலத்துல....”
“இல்லீங்க.. அவருக்கு சில வேலையை அவரே செஞ்சாத்தான் பிடிக்கும்.. அப்டியே வளர்ந்துட்டார்” என்றார் இளைஞர்.

“அதுசரிதான்க. நீங்க ஓனர். நீங்க சொன்னா கேட்க மாட்டாரா என்ன?”
ஒரு 30 வினாடி சிரித்தவர் சொன்னார்: “நீங்க வேறங்க. அவருதாங்க ஓனர். இந்த பங்க், அதோ அந்த காம்ப்ளக்ஸ்லாம் அவருதுதான். அவர் பையன்தான் நான். எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், எனக்கே சம்பளம்தான்னுட்டார்”

விக்கித்துப் போய் வெளியே பார்த்தேன். அந்தப் பெரியவர் டீ பார்சலோடு நடந்து வந்துகொண்டிருந்தார்.

#நெத்தியடி..
1. என்ன ஒரு அருமையான மேனேஜ்மெண்ட்.?!!
2. என்ன ஒரு உழைப்பு..?!!!
3. சிம்பிளிசிட்டி..!!!!
4. வாழ்க்கையில் எதார்த்தம்..!!!

நாம் கற்றுக்கொள்ள இன்னும் இவரைப் போல மாமனிதர்கள் இருக்கிறார்கள். நாம் கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டும்.

ads