புதிய பதிவுகள்

காளான் வளர்ப்பீர்! கை நிறைய சம்பாதிப்பீர்-

காளான், இது மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள சைவ உணவாகும். இந்தக் காளான்களில் இயற்கையாக விளையக் கூடிய காளான்கள் பல உண்டு என்றாலும் இதில் ஒரு சில காளான்களை மட்டுமே உணவாக உண்ண முடியும். ஆனால் செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்கள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளலாம். செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்களில் சிப்பிக் காளானும், பால் காளானும் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய உணவாகும்.

காளான் வளர்ப்பு பயிற்சியும், கடனும்:

 1. காளான் வளர்ப்பு பயிற்சியானது ஒரு நாள் பயிற்சி வகுப்பாகும், காலை வகுப்பில் கலந்து கொண்டால் மாலையில் வகுப்பு முடித்துவிடும். மாலையில் பயிற்சி பெற்றதிற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு இத்தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வாங்க இந்தச் சான்றிதழ் அடிப்படைத் தகுதி பெற்ற ஒன்றாகும்.
 2. காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
 3. ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம்  வங்கியில் சொத்து மதிப்பு காட்டத் தேவை இல்லை. ஒரு லட்சத்திற்கு மேல் கடன் வாங்கினால் சொத்துக் கணக்கு காட்ட வேண்டும்.
 4. இன்று அனைத்து வங்கிகளிலும் காளான் வளர்ப்பிற்கான கடன் உதவி  வழங்கப்படுகிறது.
 5. 1 லட்சத்தை 2 வருடத்திற்குள் கட்டி விட வேண்டும் என்பது விதி.

காளான் வளர்ப்பு பற்றி செய்முறை:

காளன் வளர்ப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களாவன,

 1. வைக்கோல்
 2. காளான் விதை
 3. பிளாஸ்டிக்

செய்முறை:

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். இதனை நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இது முதல் முறையாகும்.

அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி  இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து, இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலர வைத்து, ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.

இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

காளான் விற்பனை:

 • 1 கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் 30 ரூபாய் ஆகும்.
 • 1 கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் 100 வரை விற்பனை செய்யலாம்.
 • நேரடியாக நாமே விற்பனை செய்ய ஆகும் செலவு 120 முதல் 150 வரை . 1 கிலோ காளான் இன்று இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

காளானில் உள்ள சத்துக்கள்:

 • காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
 • தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.

காளான் உணவின் மகத்துவங்கள்:

 • உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
 • நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
 • சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
 • இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
 • ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.

இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய அருள்தாமஸ் என்பவர் "ரோபஸ்ட்" என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…

 1. ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
 2. தமிழக உணவுத்  தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
 3. விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
 4. கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.

மேலும் தொடர்புக்கு – அருள் தாமஸ் – 91- 98411 31674 ,  91- 97898  41458


No comments