அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

புதிய பதிவுகள்

லாபம் தரும் தென்னை காயர் பித்!

லாபம் தரும் தென்னை காயர் பித்!

தென்னை நார் கழிவில், 'காயர் பித்' தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மாவட்டம், வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் கூறுகிறார் :நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முதலாக விவசாய சங்கத்தை துவக்கியவரும், இலவச மின்சாரத்துக்காக போராடியவருமான, நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கத்தில், சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக, என் அப்பா கோவிந்தசாமி இருந்தார்.
எங்கள் குடும்பத்துக்கு, 35 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த நான், விவசாயத்துக்கு வந்துவிட்டேன். தம்பிகள் இருவரும், வெளியூரில் வேலை பார்க்கின்றனர்.
தேங்காய் உரித்த பின் கிடைக்கும் மட்டைகளை, இயந்திரத்தில் அரைத்தால், மஞ்சி கிடைக்கும். அதைத் திரித்து தான் கயிறு உற்பத்தி செய்வர்.
மட்டைகளை அரைக்கும்போது, கழிவுத் துகள்களும் வெளியாகும். மாடித் தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார்க்கழிவு பயன்படுகிறது.
இஸ்ரேல், நெதர்லாந்து, அரபு நாடுகளுக்கு, நிறைய ஏற்றுமதி வாய்ப்பும் ஆகிறது.நார்க்கழிவை லாரியில் ஏற்றி அனுப்பும்போது, இடத்தை அடைத்துக் கொள்வதுடன், காற்றிலும் பறந்ததால், அதை நார்க்கட்டியாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
அதற்கான இயந்திரங்களை வாங்கி, கட்டியாக்கி விற்பனை செய்து வருகிறேன். இப்போது, 'காயர் பித்' தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி வருவதுடன், விற்பனை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இதை அமைக்க, வங்கிக் கடனும் கிடைக்கிறது.மாதத்தில், 20 நாட்களுக்குத் தான் வேலை இருக்கும்.
நன்றாக வெயில் அடிக்கும் ஆறு மாதம் தான், தென்னை நார்க்கட்டியை தயாரிக்க முடியும். தற்போது தினமும், 10 டன் அளவுக்கு, காயர் பித், அதாவது, 2,000 கட்டிகள் உற்பத்தி செய்கிறேன்
. ஒரு காயர் பித், 70 ரூபாய்க்கு விற்கிறேன். ஏஜன்ட் கமிஷன், போக்குவரத்து, வங்கித் தவணை, கரன்ட் செலவு போக, தினமும், 8,000 ரூபாய் லாபமாக நிற்கிறது.
வெயில் காலத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மழைக் காலத்தில் காய வைக்க முடியாது என்பதால், உற்பத்தி இருக்காது. இப்போது, மழைக் காலங்களிலும் உலர் கலன் பயன்படுத்தி காய வைக்கும் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யலாம் என, முடிவு செய்து உள்ளேன்.
முன்னர், தென்னை விவசாயம் மட்டும் செய்து வந்த நான், இப்போது இதையும் கூடுதல் தொழிலாக செய்வதால், வருமானம் அதிகரித்துள்ளது. அடுத்து, மண்புழு உரம், பஞ்ச கவ்யா, உயிர் உரங்கள் கலந்து, செறிவூட்டப்பட்ட காயர் பித் தயாரிக்கும் யோசனை உள்ளது.
தொடர்புக்கு: 09865555267 .

நன்றி: தினமலர்

No comments